திமுக எம்.பி திருச்சி சிவாவின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கல்வி அமைச்சகத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரைத்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்படுகிறது, அப்பள்ளிகளில் தமிழை கற்பிக்க ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
இந்தி, சமஸ்கிருதத்தை மட்டுமே மத்திய அரசு கட்டாயப்படுத்தி திணிக்கிறதா ? அப்படியெனில் தமிழகத்தில் ஏன் தமிழை கட்டாயமாக்கவில்லை என கேள்விகளை முன்வைத்த திருச்சி சிவா, 6ஆம் வகுப்பில் சமஸ்கிருத பாடத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்று அறிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது உள்ளூர் மாணவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் எனக் குற்றம்சாட்டினார்.
தமிழகத்திற்கானது மட்டுமல்லாமல் இது அனைத்து மாநிலங்களுக்கான ஒரு பொதுப் பிரச்சனை. எனவே தான் இதை கவனத்துக்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன் என்ற அவர், மத்திய அரசின் இத்தகைய முடிவுகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது, தமிழ் மொழியையும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனையடுத்து, திருச்சி சிவாவின் கோரிக்கையை கல்வித்துறை அமைச்சகம் பரிசீலிக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரைத்தார்.







