INDIA கூட்டணியை தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிடுவதா? – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

INDIA கூட்டணியை தீவிரவாத அமைப்புகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒப்பிட்டதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல்…

INDIA கூட்டணியை தீவிரவாத அமைப்புகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒப்பிட்டதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்தது தொடர்பான காணொலி வெளியானது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே (ஜூலை 20) மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இதே போல் அடுத்த நாளும் இதே விவகாரம் எழுப்பப்பட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் இந்த கூட்டத் தொடர் முழுவது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் நோட்டீஸ் அளித்திருந்தன. ஆனால் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும், மாநிலங்களவையும் நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்றும் தொடங்கிய உடனே கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா மற்றும் பாஜக எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி  ”எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றனர். எதிர்கட்சிகள் கூட்டணி நெடுநாட்களுக்கு எதிர்கட்சியாகவே இருக்க வேண்டுமென தீர்மானித்து விட்டனர். அது தான் அவர்களின் தலையெழுத்தாகவும் உள்ளது.

இதுபோன்ற ஒரு குறிக்கோள் அற்ற எதிர்கட்சிகளை பார்த்ததே இல்லை. அவர்கள் கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் வைத்துள்ளனர். ஆனால் தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரிலும் , கிழக்கிந்தியா கம்பெனி என்ற பெயரிலும் “இந்தியா” உள்ளது. எனவே குறிக்கோளற்ற எதிர்கட்சிகளை பொருட்படுத்தவே தேவையில்லை” என தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் பேசியதாவது..

”மணிப்பூர் விவகாரம் குறித்து 267வது விதியின் கீழ் விவாதிக்க பல உறுப்பினர்கள் 4வது நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். நாங்கள் மணிப்பூர் பிரச்னை குறித்து பேசுகிறோம். ஆனால், பிரதமர் கிழக்கிந்திய  கம்பெனி பற்றி பேசுகிறார்” என தெரிவித்தார்.

மேலும் இது குறித்து மகளிர் காங்கிரஸின் முன்னாள் தலைவரான  ஷோபா ஓஜா “கிழக்கிந்திய கம்பெனியின் பெயரில் கூட ‘இந்தியா’ இருப்பதாகப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்; ஆனால் பல திட்டங்களுக்கு அவரே இந்தியா எனும் பெயரை சூட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளதால் பிரதமருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது” என விமர்சித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.