மருத்துவர்கள் போராட்டம்; டெல்லி போலீசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

நீட் முதுகலை மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கை உடனடியாக நடத்திடக் கோரி டெல்லியில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக காவல்துறை தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முதுகலை…

நீட் முதுகலை மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கை உடனடியாக நடத்திடக் கோரி டெல்லியில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக காவல்துறை தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 2020ம் ஆண்டு நடக்க இருந்தது. கொரோனா தொற்று காரணமாக இத்தேர்வு நடப்பாண்டு செப்டம்பரில் நடந்து முடிந்தது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னரும் தற்போது வரை கவுன்சிங் நடத்தப்பட்டு இடங்கள் ஒதுக்கப்படாமலேயே இருந்துள்ளது.

எனவே உடனடியாக கவுன்சிலிங்கை நடத்திடக் கோரி டெல்லியில் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று தங்கள் போராட்டத்தை பதிவு செய்யும் வகையில் மவுலானா ஆசாத் கல்லூரியிலிருந்து உச்சநீதிமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர்.

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கும் மருத்துவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலர்கள் மருத்துவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் நள்ளிரவு விடுவிக்கப்பட்டனர்.

https://twitter.com/ArvindKejriwal/status/1475771054991699968

இந்நிலையில், போராட்டத்தில் காவல்துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்தும், நீட் முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரியும் எய்ம்ஸ் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே டெல்லியில் ஏராளமான மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிப்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையின் இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் பிரதமருக்கு கடிதத்தையும் எழுதியுள்ளார். அதில், மருத்துவர்களின் கோரிக்கைகளை பிரதமர் ஏற்றுக்கொள்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.