கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என தமிழக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 7ஆம் கட்ட அகழாய்வு நடைபெற உள்ளது. இந்த அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசின் தொல்லியல்துறை அனுமதி வழங்கி உள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் அகழாய்வு தொடங்கும் என தமிழக தொல்லியல்துறை இணை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
கீழடியில், 2015ஆம் ஆண்டு முதல் 2020 வரை 6 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதுவரை நடைபெற்ற அகழாய்வில், 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்னரே, கீழடியில் நகர நாகரீகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கீழடியில் தங்க பொருட்கள், தமிழ் பிராமி எழுத்துகள், முதுமக்கள் தாழி, மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகளும் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




