கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவந்த 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்தன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கப்பட்டது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதியில் விரிவான முறையில் நடைபெற்ற அகழாய்வு பணிகளில் 25க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, கருப்பு சிகப்பு பானை ஓடுகள், சுடுமண் பொம்மை, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் நிறைவடைந்தன. அகழ்வாய்வின்போது கண்டறியப்பட்ட தொன்மையான பொருட்களை தொல்லியல்துறையினர் ஆவணப்படுத்தியுள்ளனர். கீழடியில் 10 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அகழாய்வு பணிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் கீழடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதியில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த தொல்லியல்துறை அகழாய்வு பணிகளும் நிறைவுபெற்றன. 3 இடங்களில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிவகளையில் அடுத்தாண்டு மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளும், கொற்கையில் கடல்சார் ஆய்வு மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.