காஷ்மீர் பாதாம் பருப்புக்கு வரவேற்பு குறைந்து வருவதால், அதிக வருமானம் தரும் ஆப்பிள் விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் 1974-75ஆம் ஆண்டில் 9,361 ஹெக்டேரில் பாதாம் பயிரிடப்பட்டது. இது 1994-95இல் உச்சத்தை எட்டி 20,222 ஹெக்டேரில் பயிரிடப்பட்டது. இந்த எண்ணிக்கை 2015-2016இல் 7,132 ஹெக்டேராகக் குறைந்தது. இது மேலும் குறைந்து 2020-21இல் 5,483 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே, இந்தியாவின் பாதாம் இறக்குமதி மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2008இல் 34.36 மெட்ரிக் டன்னாக இருந்த இறக்குமதி, 2019இல் 115.05 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. இந்நிலையில், 2019-20 முதல் 2020-2021 வரை இந்தியாவின் பாதாம் இறக்குமதி 44 சதவீதம் அதிகரித்துள்ளதாக 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த அமெரிக்க வேளாண்மைத் துறையின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புல்வாமா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பாரம்பரிய பாதாம் விவசாயிகள், தற்போது பாதாம் விவசாயத்தைக் கைவிட்டு வருகின்றனர். பயார் கிராமத்துக்குச் செல்லும் வழியில் ஏக்கர் கணக்கில் இருந்த பாதாம் மரங்கள் வெட்டப்பட்டு, தற்போது அவற்றில் ஆப்பிள் மரங்கள்தான் அதிக அளவில் காணப்படுகின்றன.
காலநிலை மாற்றம், நீர்ப்பாசனம் இல்லாமை, பாதாம் மரங்களின் வளர்ச்சிக்கு உதவும் ஒட்டுதல் என்பது இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் பாதாம் சாகுபடி காஷ்மீரில் குறைந்து வருகிறது. ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பாதம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து, ஜம்மு & காஷ்மீர் தோட்டக் கலைத் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதாம் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கான தற்போதைய திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை. பாதாம் மலைப்பாங்கான பகுதிகளில் முதன்மைப் பயிராக இருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக இது குறைந்துவிட்டது என்றார்.
மேலும், காஷ்மீர் பாதாம் பொதுமக்களிடையே அதிக கவனத்தைப் பெறவில்லை. அதே நேரத்தில் ஈரான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் பாதாம் பருப்புகள் காலப்போக்கில் அதிக கவனம் பெற்று, மக்கள் இறக்குமதி செய்யப்பட்ட பாதாமைத் தேர்ந்தெடுத்தனர். பல ஆண்டுகளாக விவசாயிகளின் வருமானம் குறைந்ததால் பாதாம் மரங்களை வெட்டிவிட்டு, ஆப்பிள் விவசாயத்தில் இறங்கியுள்ளனர் என்றார்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீரின் பயார் கிரமாத்தைச் சேர்ந்த விவசாயி குலாம் ஹாசன் கான் கூறியதாவது:
கடந்த ஆண்டில் விளைச்சல் குறைவு மற்றும் இடுபொருள் செலவு அதிகரித்ததால் பாதாம் மரங்களை வெட்டிவிட்டு, 1,000 ஆப்பிள் மரங்களை வாங்கினேன். பயிரிட்ட ஓராண்டுக்குள் பாதாமைவிட இரண்டு மடங்கு வருமானம் கிடைத்தது.
2016ஆம் ஆண்டு முதல் பாதாம் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. 40 கிலோ பாதாமின் விலை மாறாமல் சராசரியாக ரூ. 6,000- ரூ. 6,500 ஆக மட்டுமே உள்ளது. அதேசமயம் செலவுகள் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காஷ்மீர் பாதாமிற்கு பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாததே முக்கியக் காரணம்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான பாதாம் விலை மலிவானது. அதுமட்டுமல்ல, காஷ்மீரி பாதாம் பருப்பை விட பெரியது. வாடிக்கையாளர்கள் அதைத்தான் மிகவும் விரும்புகின்றனர் என்று கான் கூறினார்.
மேலும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தற்காலிகச் சந்தையை ஊருக்கு அருகில் அமைத்தனர். அப்போது, காஷ்மீர் பாதாமிற்கு அங்கு கடுமையான போட்டி நிலவியது. இதன் மூலம் எங்களது பாதாமிற்கு சிறந்த விலை கிடைத்து வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக புல்வாமாவில் பாதாம் பருப்புகளை வாங்குவதற்கு மிகக் குறைவானவர்களே வருகிறார்கள். இதனால், நல்ல விலையைக் கேட்கும் நிலை விவசாயிகளுக்கு இல்லாமல்போய்விட்டது என்றார்.
அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் அதிக அடர்த்தி கொண்ட ஆப்பிள்களைப் பயிரிடுவது விவசாயிகளுக்கு அதிக பயன் தருவதாகவும், நடவு செய்த முதல் வருடத்திலேயே அதிக வருமானத்தைத் தருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். இதனால், காஷ்மீர் விவசாயிகள் பாதாமை விட ஆப்பிள்களை பயிரிடுவதையே தேர்வு செய்து வருகின்றனர்.