கரூர் செல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி.!

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எம்.பி. இன்று கரூர் செல்ல இருக்கிறார்.

கரூரில் கடந்த  27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.

இதற்கிடையே, அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. மேலும், தவெக சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எம்.பி. இன்று மதியம் 2 மணியளவில் கரூர் செல்ல இருக்கிறார். முதலில் வேலுசாமிபுரத்தில் பிரசாரம் நடந்த  இடத்தை பார்வையிட உள்ளதாக தெரிகிறது.பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார். அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.