கருணாநிதி நூற்றாண்டு விழா – 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி 5 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  “மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்” என்ற கருணாநிதியின் சொல்லிற்கிணங்க, அவரது நூற்றாண்டு விழாவினை…

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி 5 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

“மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்” என்ற கருணாநிதியின் சொல்லிற்கிணங்க, அவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-2024ஆம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்க நாளான இன்று (7.6.2023) முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

இன்றைய தினம் தமிழகமெங்கும் நெடுஞ்சாலை துறையின் 340 சாலைகளில் நடப்படவுள்ள மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையைச் சார்ந்த சுமார் 46,410 மரக்கன்றுகள், 24 மாத காலம் வளர்ச்சிக் கொண்டவையாகும். மேலும், பருவமழைக்கு முன்பாகவே 5 லட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு,பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.