அடுத்தது T68 ஆ? அல்லது தேர்தலா?

MGR-ன்  ”ஆயிரத்தில் ஒருவன்” துவங்கி, சிவகார்த்திகேயனின் ”வேலைக்காரன்” வரை நடிகர்கள் அரசியல் பேசி இருந்தாலும், விஜய்யின் திரைப்படங்களில் உள்ள அரசியல் வேற லெவல். ஒரு விரல் புரட்சி போல் ஒரு அறிக்கையால் அனைவரையும் இன்று…

MGR-ன்  ”ஆயிரத்தில் ஒருவன்” துவங்கி, சிவகார்த்திகேயனின் ”வேலைக்காரன்” வரை நடிகர்கள் அரசியல் பேசி இருந்தாலும், விஜய்யின் திரைப்படங்களில் உள்ள அரசியல் வேற லெவல். ஒரு விரல் புரட்சி போல் ஒரு அறிக்கையால் அனைவரையும் இன்று மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் நடிகர் விஜய்.

2008-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற குருவி திரைப்படத்தில் அடிமை தொழிலாளிகளின் கஷ்டத்தை பேசும் கதாநாயகனாக நடித்த அவர், வேட்டைக்காரனில் போலீசாரே தொட பயப்படும் போலீஸ் ரவியாகவும், துப்பாக்கியில் ஸ்லீப்பர் செல்களை அழிக்கும் ராணுவ உளவுப் பிரிவு அதிகாரியாகவும் ஆங்காங்கே அரசியல் பேசியிருப்பார்.

2013ல் விஜய்யின் சினிமா வாழ்க்கையைப் புரட்டி போட்ட திரைப்படமாக அமைந்தது தலைவா. இந்த திரைப்படத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் கோபத்தை ஒரே நேரத்தில் சம்பாதித்தார். தலைவா டைடில் கார்டில் “TIME TO LEAD” எனும் வாசகத்தால் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவிடமும், “தளபதி” எனும் அடைமொழியால் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவிடமும் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டார் “தளபதி” விஜய்.

2014-ல் கத்தி திரைப்படத்தின் இருந்து மிகவும் கூர்மையான அரசியலில் இறங்கிய விஜய், தண்ணீர் பிரச்னையை பேசியதோடு மட்டுமல்லாமல் 2G அலைக்கற்றை பற்றி பேசி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார், விமர்சனங்களால் வெற்றியடைந்த விஜய் படங்களுக்கு விதை போட்டது அந்த திரைப்படம் தான்.

2017-ல் பைரவா படத்தில் தனியார் கல்லூரிகள் குறித்துப் பேசினார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே ஆண்டு வெளியான மெர்ஸல் திரைப்படத்தில், இணையத்தில் TREND ஆகும் “அன்றே கணித்தார் சூர்யா” போல இன்று நடைபெறும் இந்தி பிரச்னையை அன்றே காண்பித்தார். அது மட்டுமின்றி மொத்த சர்ச்சையும் கிளைமாக்ஸில் தான் அரங்கேறியது. “GST” எனும் ஒரே வார்த்தையால், பாஜக தலைவர்களின் கோபக் கனலுக்கு ஆளானார். பாஜக தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா, “ஜோசப் விஜய்” ஒரு கிருத்தவர் அதனால் தான் மத்திய அரசு கொண்டு வந்த GST-ஐ விமர்சனம செய்வதாக பேசினார்.

2018-ல் வெளியான சர்கார் திரைப்படம் சொல்லவே வேண்டாம், அது நேரடி அரசியல் படமாகவும் இருந்தது, விஜய்யின் நேரடி அரசியல் வாழ்க்கைக்கு ஒரு அச்சானியாகவும் அமைந்தது. தெர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சராக மட்டும் வேறு ஒருவரை முன்மொழிந்து அரசியல் ஆசை தான் உள்ளது, பதவி ஆசை இல்லை என்றும் அவர் மறைமுகமாக சொன்னது நேரடியாக தெரிந்தது.

மேலும் 2019ல் பிகில் திரைப்படத்தில் விளையாட்டு அரசியல் பற்றி பேசிவிட்டு, மாஸ்டரில் உம்முனும், பீஸ்ட்டில் கம்முனும், வாரிசில் ஜம்முனும் நடித்து அரசியலே பேசாமல் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

 

2021ம் ஆண்டில், கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு 120-க்கும் மேற்பட்ட இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று தமிழ்நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தினர். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படங்களை கொடுத்த விஜய் அன்று குடும்பங்கள் கொண்டாடும் உள்ளாட்சி பிரதிநிதிகளை கொடுத்தார். பின்னர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டதையடுத்து மாநிலத்தின் சில பகுதிகளில் விஜயை அடுத்த வருங்கால முதல்வர் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதோடு, துண்டு பிரசுரங்களிலும் விநியோகிக்கப்பட்டது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை கௌரவித்து ஊக்கபணமும் வழங்குவதாக விஜய் மக்கள் இயக்க பொதுசெயளலார் மூலமாக அறிவித்து இருந்தார், இதுவே அவரது அரசியலில் ஒரு மாபெரும் UPDATEஆக இருந்த நிலையில்.

லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு செய்தி பரவியது. லிஃப்ட்டில் வரமால் படிபடியாக அரசியல் அரியாசனத்தில் ஏறும் விஜய் இன்று திடீரென யாரும் எதிர்பாரா நேரத்தில் வரும் ஜூன் 17 அன்று “அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் ” சார்பாக சென்னை, நீலாங்கரையில்
உள்ள தனியார் மண்டபத்தில் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த “பத்து மற்றும் பனிரெண்டாம் ” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு “தளபதி விஜய் ” அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை
வழங்கி கெளரவிக்கப்படும்” என ஒரு அறிக்கையை விஜய் சார்பாக புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டார்.

இதில் கவனிகப்பட வேண்டிய விஷயம், ”தொகுதி வாரியாக” வழங்கப்படும் எனும் சொற்றொடரை உபயோகப்படுத்தியது தான். ஒவ்வொரு தொகுதியிலும் தனது செல்வாக்கு, அங்கு இருக்கும் மக்களின் மனநிலை உள்ளிட்ட பல கோணங்களில் விஜய் பார்க்கிறார் என எடுத்துக் கொண்டாலும், அதனை அவர் பொறுமையாக கையாளும் விதம் தமிழ்நாட்டு அரசியலுக்கு மிகவும் புதுமையான ஒன்றாகவே உள்ளது. நேரடியாக களத்தில் இறங்காமல், அதன் ஆழம், அங்கு மாற்றுகட்சியினருக்கு இருக்கும் செல்வாக்கு என பல கோணங்களில் அலசி, ஆராய்ந்த பின்னர் இறங்கவுள்ளது தெளிவாக அவரது திட்டம் நாடாளுமன்ற தேர்தளுக்கு அல்ல சட்டமன்ற தேர்தலுக்கானது என தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.