”கர்நாடக மக்கள் பாஜகவை புறக்கணித்துள்ளனர்” – விசிக தலைவர் திருமாவளவன்

கர்நாடக தேர்தலின் மூலம் பாஜகவை மக்கள் புறக்கணித்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை…

கர்நாடக தேர்தலின் மூலம் பாஜகவை மக்கள் புறக்கணித்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

”கர்நாடக தேர்தலில் பாஜகவினரை மக்கள் விரட்டி அடித்துள்ளனர். கடந்த தேர்தலை விட 30 தொகுதிகளை பாஜக இம்முறை இழந்துள்ளது. வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும். தென்னிந்தியாவில் கர்நாடகா வழியாக பாஜக ஊடுருவி, மற்ற மாநிலங்களுக்குள் வர முயற்சிக்கிறது என்று எனது பிரச்சாரத்தில் பேசினேன். பாஜக வழக்கம்போல் ஜனநாயக விரோத செயல்களை செய்வார்கள். அதற்கு காங்கிரஸ் இடம் கொடுக்கக் கூடாது. கட்டுக்கோப்புடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாங்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக பத்து இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டோம். அங்கு அதிக அளவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்த முறை மதச்சார்பற்ற ஜனதா தளம் பெறும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜகவுக்கு வலிமை கொடுக்கும் வகையில், பல மாநிலங்களில், பல மாநில கட்சிகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் போல் இயங்குகிறது. பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும், இந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலை பார்த்து ஒரு நல்ல முடிவிற்கு வர வேண்டும். அதிமுக இப்போதே எச்சரித்துக் கொள்ள வேண்டும். பாஜகவுடன் சேர்வதால் அவர்களுக்கு எந்த ஒரு வலிமையும் இல்லை. அவர்களுடன் கூட்டணி வைத்தால் அதிமுக தொய்வு தான் அடையும்.

காங்கிரஸ் கட்சியிலே உட்கட்சி பிரச்னை இருக்கிறது. யார் முதலமைச்சர் என்ற முடிவை தலைமை எடுக்கும். அதுவரை காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாக இருப்பது நல்லது. இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளிடையே பெரிய இடைவெளி இருந்தது. ஆனால் இந்த முறை அவ்வாறு இல்லை. திமுகவை பலவீனப்படுத்தும் எந்த ஒரு செயலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈடுபடாது. அப்படிப்பட்ட காரியத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் செய்யாது.

அண்ணாமலையின் பேச்சை மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால் எந்த தாக்கமும் ஏற்படுத்தாது. மற்றவர்களின் பேச்சுகளை ஆடியோவாக பதிவு செய்வதும், வீடியோவாக பதிவு செய்வதும் பாஜகவின் அணுகுமுறையாக இருக்கிறது. கர்நாடகாவில் காலூன்ற முடியும் என்ற இடத்திலேயே மக்கள் பாஜகவை புறக்கணித்துள்ளனர்”.

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.