கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெறும் புதிய அரசு பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே பதவியேற்க உள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் பெரும் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று பதவியேற்கவுள்ளது.
முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் நிலையில் துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்க உள்ளார். இவர்களுடன் முதற்கட்டமாக 8 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். அதன்படி, மூத்த தலைவர்களான ஜி.பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
மேலும் இவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பதவியேற்பு விழா இன்று மாலை பெங்களூருவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.







