ஜூலை மாதம் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 31.24 டி.எம்.சி நீரில் 1.7 டி.எம்.சி நீர் மட்டுமே கொடுத்துள்ளது என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் அ.ராசா, கர்நாடக மாநிலம் காவிரியில் தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நீர் பங்கீடு குறித்தும், நடப்பு மாதம் வரை திறந்து விடப்பட்ட நீரின் அளவு குறித்தும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு,
உச்சநீதிமன்றத்தின் 2018ம் ஆண்டு உத்தரவின்படி கர்நாடகா தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீர் ஆண்டு தோறும் திறந்து விட வேண்டும்.
அதன்படி நடப்பாண்டு ஜூலை மாதத்திற்கு மட்டும் தமிழ்நாட்டிற்கு 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும். ஆனால் ஜூலை 25ம் தேதி வரை 1.7193 டிஎம்சி நீர் மட்டுமே கர்நாடகா திறந்து விட்டுள்ளது.
2023 ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு 53.19 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும்.
ஆனால் ஜூலை 25ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 32.203 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகா தமிழ்நாட்டிற்கு திறந்து விட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.







