கர்நாடக தேர்தல்; 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

கர்நாடக தேர்தலுக்கான 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ஜெகதீஷ் ஷெட்டரின் வசம் இருந்த ஹூப்ளி – தர்வாட் மத்தியத் தொகுதியில் மகேஷ் தெங்கின்கையை பாஜக நிறுத்தியுள்ளது. கர்நாடக தேர்தல் 224 தொகுதிகளை…

கர்நாடக தேர்தலுக்கான 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ஜெகதீஷ் ஷெட்டரின் வசம் இருந்த ஹூப்ளி – தர்வாட் மத்தியத் தொகுதியில் மகேஷ் தெங்கின்கையை பாஜக நிறுத்தியுள்ளது.

கர்நாடக தேர்தல்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 10ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் பாஜக கடந்த 11ம் தேதி வெளியிட்ட முதல்கட்ட பட்டியலில் 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. இதில் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

இதில் சீட் கிடைக்காத எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அமைச்சர் எஸ்.அங்கார், ஆர்.சங்கர் எம்.எல்.சி., லட்சுமண் சவதி எம்.எல்.சி. ஆகியோர் விலகுவதாக அறிவித்தனர். தொடர்ந்து பாஜக 12ம் தேதி 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களில் 11 பேருக்கு சீட் நிராகரிக்கப்பட்டுள்ளது.பாஜக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல்

இந்நிலையில் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் வசம் இருந்த ஹூப்ளி – தர்வாட் மத்திய தொகுதியில் மகேஷ் தெங்கின்கை நிறுத்தப்பட்டுள்ளார். மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள ஷிமோகா மற்றும் மான்வி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

ஜெகதீஷ் ஷெட்டர்

கட்சியின் மூத்த தலைவரான ஷெட்டார் 6 முறை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர். முன்னாள் முதலமைச்சர், சபாநாயகர், கட்சி தலைவர், மூத்த தலைவர் மற்றும் அமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ள அவரிடம் இந்த முறை போட்டியிட வேண்டாம் என்று கட்சி அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவரது ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் இருந்து உள்ளனர். தனக்கு எதிராக சதி நடக்கிறது என்றும் அதனால் கட்சியில் தனக்கு சீட் வழங்கவில்லை என்றும் ஷெட்டார் குற்றச்சாட்டாக கூறினார். இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து விலகி தற்போது காங்கிரசில் இணைந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.