முக்கியச் செய்திகள் இந்தியா

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் முதலமைச்சராக கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற எடியூரப்பா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளானது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தீவிரமடைந்துள்ள சூழலில், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தமிழ்நாட்டிலும் மிக முக்கியாமானதாகவே பார்க்கப்பட்டது.

கர்நாடக முதலமைச்சருக்கான பரிசீலனை பட்டியலில் பசவராஜ் பொம்மை, அரவிந்த் பெல்லத் மற்றும் முருகேஷ் நிரானி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பது குறித்து பெங்களூருவில் இன்று மாலை ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கர்நாடக மாநில பாஜக தலைவர், மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர். பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் மற்றும் கிஷன் ரெட்டி உள்ளிட்டோரும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 61 வயதான பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை நேரில் சந்தித்த பசவராஜ் பொம்மை, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நாளை மாலை 3.45 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்கவுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்: ஸ்டாலின்!

Halley karthi

எழுவர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை – உயர்நீதிமன்ற மதுரை கிளை

Halley karthi

மத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்

எல்.ரேணுகாதேவி