கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை 8மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்பதால், மாலைக்குள் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிந்துவிடும்.
வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ள சூழலில், தனது நிபந்தனைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி அரசாங்கத்தில், முதலமைச்சராக தான் இருப்பேன் என்றும், முதலமைச்சராக தன்னை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
நீர்வளம், பொதுப்பணித்துறை போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி தங்கள் கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் என்பதுடன், ஜேடிஎஸ் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை யாரும் தடுக்க கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
கூட்டணி ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த கூடாது, சித்தாந்த ரீதியான எந்த முடிவையும் விவாதிக்காமல் எடுக்க கூடாது உள்ளிட்ட அடுக்கடுக்கான நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில் 50 இடங்களுக்கு மேல் நிச்சயம் ஜேடிஎஸ் கட்சி வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள குமாரசாமி, தங்களின் நிபந்தனைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி சேர தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.