கர்நாடகாவில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை (ஜூன்.4) ஆறாக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் 42 வயதுடைய ஒருவரும், உடுப்பியில் 65 வயதுடைய ஒருவரும் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை ஐந்தை கடந்தது.
சுகாதாரத்துறை தகவலின்படி, இருவருக்கும் கடுமையான சுவாச பிரச்னைகள் (SARI) இருந்தன. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 153 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், 39 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை நேற்று தெரிவித்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல், மொத்தம் 735 கொரோனா தொற்று வழக்குகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளது. இதில் 293 பேர் குணமடைந்தனர். ஆறு பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 324 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட 7 பேர் மருத்துவமனைகளிலும், அதே நேரத்தில் 317 நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் ஐசியுவில் இரண்டு நோயாளிகளும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொது படுக்கைகளில் ஐந்து நோயாளிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.







