தனுஷ் திருடனாக நடித்த “கர” திரைப்படம் – மினி விமர்சனம் இதோ…!

விக்னேஷ்ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ உட்பட பலர் நடிப்பில் இந்த வாரம் கர படம் வெளியாகியுள்ளது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், விக்னேஷ்ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், சூராஜ்வெஞ்சரமூடு, கருணாஸ் உட்பட பலர் நடிப்பில் இந்த வாரம் கர படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனம் இதோ…

ராமநாதபுரம் மாவட்ட விவசாயி கே.எஸ்.ரவிக்குமார் மகனான தனுஷ், திருச்சி திருவெறும்பூரில் ஒரு எம்எல்ஏ வீட்டில் திருடும்போது பொதுமக்களால் பிடிபடுகிறார். அவரை தானே பிடித்ததாக பொய் கணக்கு எழுதி பதவி உயர்வு வாங்க நினைக்கிறார் போலீஸ் டிஎஸ்பி சுராஜ்வெஞ்சரமூடு. ஆனால், தனுசோ அவரை தாக்கி தப்பி சென்று, மனைவியுடன் ரேணிகுண்டாவில் ஒரு ஓட்டலில் வேலை செய்கிறார். அப்போது சொந்த மெஸ் தொடங்கும் ஆசையில் பண உதவி கேட்டு, பல ஆண்டுகளுக்கு பின் அப்பா கே.எஸ்.ரவிக்குமாரை சந்திக்க சொந்த ஊர் வருகிறார். அப்போது திடீரென கே.எஸ்.ரவிகுமார் இறக்க, அவரை தங்கள் சொந்த நிலத்தில் அடக்க முடியாதபடி பிரச்னைகள். வங்கியில் கடன் வாங்கியிருப்பதால் நிலத்தை ஜப்தி செய்வதாக ஜெயராம் அதிகாரியாக இருக்கும் அந்த வங்கி அறிவிக்கிறது. அப்பாவை புதைக்க முடியாத கோபத்தில் அந்த பேங்கில் கொள்ளை அடிக்க நினைக்கிறார் தனுஷ். அடுத்து என்ன நடக்கிறது. போலீஸ் அதிகாரியான சுராஜ் வெஞ்சரமூடு தனுசை பிடித்தாரா? விவசாயிகள் பிரச்னை, பேங்க் கடன் தொல்லை என்ன ஆனது என்பது கர படத்தின் கதை. இதை 1990களின் பின்னணியில் இயக்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ்ராஜா.

திருடனாக அறிமுகமாகும் காட்சியில் தொடங்கி, கிளைமாக்ஸ் வரை நடிப்பில் மிரட்டியிருக்கிறார் தனுஷ். போலீசில் பிடி பட்டு தவிப்பது, மனைவியுடன் ஓட்டலில் கஷ்டப்படுவது, அப்பா பாசம், வங்கிகளின் அராஜகத்தால் கொதிப்பது, வங்கி கொள்ளைக்கு பக்கா பிளான்போடுவது, போலீசை அலைய விடுவது
என ஏகப்பட்ட இடங்களில் ஸ்கோர் செய்து இ ருக்கிறார். குறிப்பாக வங்கி கொள்ளை, போலீசுக்கு தண்ணிக்காட்டுகிற சீன்கள விறுவிறுப்பு. ஆக் ஷன், சேசிங் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். அப்பாவுக்கும் அவருக்குமான சீன், கிளைமாக்ஸ் டுவிஸ்ட்டும் படத்தின் பிளஸ். என்ன, மாஸ் ஹீரோவான தனுசுக்கு இன்னும் பில்டப் காட்சிகள், கலக்கலான பாடல், பைட் வைத்து இருக்கலாம். அவர் ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிற காட்சிகளை குறைத்துவிட்டு, கதையில் கவனம் செலுத்தி இருக்கிறார் இயக்குனர்.

தனுசை தவிர, அவர் அப்பாவாக வரும் கே. எஸ்.ரவிக்குமார் மாறுபட்ட கெட்அப், கேரக்டரில் ஒரு கடன்கார விவசாயியாக, பாசக்கார அப்பாவாக வாழ்ந்து இருக்கிறார். அவர் எத்தனையோ படங்களில் நடித்துஇருந்தாலும் கர அவருக்கு மைல்கல்லாக இருக்கும். அவருக்கு விருதுகள் கிடைக்கும். அவரை போல வயதான விவசாயியாக வருகிற எம்.எஸ்.பாஸ்கரும் மனதில் நிற்கிறார். தனுஷ் மாமாவாக வந்து, தனுசுடன் பேங்க் கொள்ளையில் ஈடுபடும் கருணாசுக்கும் நல்ல கேரக்டர். போலீஸ் அதிகாரியாக வரும் சுராஜ்வெஞ்சரமூடு தனக்கே உரிய ஸ்டைலில் மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் நல்லவராக வந்து, கடைசியில் வேறு மாதிரி மாறுகிற வேடத்தில் ஜெயராமும் முத்திரை பதித்து இருக்கிறார். தனுஷ் மனைவியாக வரும் மமிதா, இதுவரை நடித்திரா பக்கா ஹோம்லி, ஏழை பெண் கேரக்டரில் உருக்கமாக வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட கண்ணம்மா பாடல் இதம். தனுஷ் நண்பனாக வரும் பிரித்வியும் சில இடங்களில் தனித்துவமான நடிப்பை தந்து இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் பாடல்கள், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு படத்தை அந்த காலத்துக்கு கொண்டு செல்கிறது. பின்னணி இசையும் பலம். முதற்பாதி நீளமாக இருப்பது மைனஸ். வங்கி கொள்ளையில் இன்னும் வேகத்தை, திருப்பங்களை கொடுத்து இருக்கலாம். அதேபோல் கிளைமாக்ஸ் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாம். ஏழை விவசாயிகளின் வாழ்க்கை, வங்கிகள் அவர்களை கடன் என்ற பெயரில் ஏமாற்றி, அவமானப்படுத்தும் விதம், ஜப்தி என்ற பெயரில் தவிக்கும் நிலை ஆகியவற்றை அழுத்தமாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். விவசாயிகளுக்கு ஆதரவான குரலை படம் எழுப்புகிறது. தொன்னுாறுகளில் கதை நடப்பதால் ராமநாதபுரத்தில் நடக்கும் கமலின் தேவர் மகன் படப்பிடிப்புடன் சில காட்சிகள் இணைகிறது. அது புதுமை. ஜெயராம் சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகளும் ரசிகர்களை ஈர்க்கிறது. தனுஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பும், பிற்பாதி படமும் பிளஸ். இன்னும் கமர்ஷியலாக, விறுவிறுப்புடன் இருந்திருந்தால் கர இன்னும் பரபரப்பாக நகர்ந்து இருக்கும்.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.