மாநில அளவிலான கபடி போட்டியில் கன்னியாகுமரி அணி வெற்றி – 12 வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு!

தாம்பரத்தில் 3 நாட்கள் நடைபெற்ற ஆடவர் மாநில அளவிலான கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட அணி சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. தாம்பரத்தில் முன்னால் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக…

தாம்பரத்தில் 3 நாட்கள் நடைபெற்ற ஆடவர் மாநில அளவிலான கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட அணி சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது.

தாம்பரத்தில் முன்னால் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக மாநில அளவில் ஆடவர் கபடி போட்டிகள் நடைபெற்றது. தாம்பரம் மாநகர திமுக, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் செங்கல்பட்டு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்றது. இந்த போட்டியை கடந்த வெள்ளிக்கிழமை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்தார்.

அரையிறுதி போட்டியில், காஞ்சிபுரம் அணியை தோற்கடித்த கன்னியாகுமரி அணியும் மற்றும் கோயம்புத்தூர் அணியை வீழ்த்திய திருச்சி அணியும் இறுதி போட்டியில் மோதின. இந்த இறுதி போட்டியை ஓய்வு பெற்ற டிஜிபி ரவி மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் டாஸ் போட்டு துவக்கினர். 5 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் இறுதி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த இறுதி போட்டியில் திருச்சி அணி 30 புள்ளிகளும், கன்னியாகுமரி அணி 40 புள்ளிகளும் பெற்றிருந்தன. 10 புள்ளிகள் கூடுதலாக பெற்ற கன்னியாகுமரி மாவட்ட கபடி அணி 2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு கபடி சாம்பியன் கோப்பையையும், தங்கப் பதக்கத்தையும் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசையும் தட்டி சென்றது. இரண்டாம் இடம் பிடித்த திருச்சி அணிக்கு கோப்பையுடன் வெள்ளி பதக்கமும் மற்றும் ரூ.30 ஆயிரம் பணமும் வழங்கப்பட்டது. 3 ம் இடம் பிடித்த காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் அணிகளுக்கு கோப்பைகளுடன் வெண்கள பதக்கமும் தலா ரூ.15 ஆயிரம் பணமும் பரிசாக வழங்கப்பட்டது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கபடி போட்டிகளில் குறிப்பிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, 12 பேர் தேசிய அளவிளான போட்டிகளில் பங்குபெரும் வாய்பை பெற்றனர். ஐ.பி.எல் கிரிக்கெட் போல் புரோ கபடி போட்டிகளில் பங்கேற்கும் சூப்பர் வீரர்களும் தேர்வாகவுள்ளனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் சிவமணி, செயலாளர் மு.வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.