கன்னியாகுமரி திக்குறிச்சியில் நிலத்தகராறின் காரணமாக தாயையும், மகளையும் காம்பவுண்ட் எழுப்பட்ட நிலத்திற்குள் வைத்து பூட்டிச்சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்-சீமா.இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் அதே பகுதியிலுள்ள நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது.
இரு தரப்பினரும் ஒரே நிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனையடுத்து இரு தரப்பினரும் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர்.
இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியாக நிலப்பிரச்சினை முடியும் வரை இரு தரப்பினரும் நிலத்திற்குள் செல்லக்கூடாது என ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அனுப்பினர்.
இந்நிலையில் சீமா தனது மகள் சம்னாவுடன் அப்பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பிரச்சினைக்குரிய நிலத்தில் சிலர் நின்றுக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட சீமா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் சீமாவையும்.சம்னாவையும் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பட்ட நிலத்திற்குள் வைத்து இருவரையும் பூட்டி விட்டுச் சென்றனர். இதில் சீமா அதிர்ச்சியினால் மயக்கமடைந்தார்.தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-வேந்தன்







