‘அரசியல் எங்களுடைய தொழில் அல்ல அரசியல் எங்களுடைய கடமை’ என கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்து முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற கமலுக்கு மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை தெற்கு தொகுதியில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள 234 தொகுதி மக்களும் என்னை அறிவார்கள். நான் ஒன்றும் மக்களுக்கு புதியவன் அல்ல. நேர்மையான அரசியலை முன்னெடுத்து அரசியல் களத்தில் மக்கள் நிதி மய்யம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் அரசியல் எங்கள் தொழில் அல்ல அரசியல் எங்கள் கடமை” என்றார்.







