மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார். காலை 10.30 மணிக்கு மகளிர் 49 கிலோ பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீராபாய் சானு 84 மற்றும் 87 கிலோ எடையை முதலில் தூக்கினார். தொடர்ந்து 89 கிலோ எடையை தூக்க அவர் முயற்சித்தபோது, அவரால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் 115 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
https://twitter.com/ikamalhaasan/status/1418894924116791312
இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய் சானு, தனது பதக்கத்தை இந்தியவுக்கு சமர்பிப்பதாக கூறியுள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் வெல்லும் தனது கனவுக்காக கடுமையாக உழைத்ததாகவும் கூறியுள்ளார்.







