தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த முகமது அப்துல்லா, சண்முகம், பி. வில்சன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து, அவர்களுக்கு மாநிலங்களவையில் நேற்று பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது
இதனிடையே கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி, இந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், தி.மு.க. சார்பில் களமிறக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்வானார்கள். அதேபோல அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகினர்.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதவியேற்றார். அவர் தமிழில் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து, திமுகவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வில்சன் மற்றும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர் சல்மா, எஸ்ஆர் சிவலிங்கம் ஆகியோர் இன்று எம்.பிக்களாக பதவியேற்றனர்.
அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோர் வரும் 28-ந்தேதி பதவியேற்கின்றனர்.







