நீட் தேர்வு விவகாரத்தில், ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு தாக்கல் செய்த அறிக்கையை, மக்கள் நல்வாழ்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நீட் தேர்வு விவகாரத்தில், ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீட் ஓர் உயிர்க்கொல்லி தேர்வு என்பதை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை உரக்கச் சொல்வதாக குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமிழ் வழியில் மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தாய்மொழி கல்வி ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில், நீட் தேர்வு தமிழ்மொழிக் கல்விக்கு எதிரான மனநிலையை வளர்ப்பதாகவும் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். உண்மையை வெளிக்கொணர்ந்து, சட்ட போராட்டத்திற்கான வழிவகைகளை ஆராய்ந்து சொன்ன நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினருக்கு மக்கள் நீதி மய்யம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகளின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.







