கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் கணவர் ஆணவ கொலை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், அயநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அமுல் என்பவர் ஆரணியை சேர்ந்த கௌதம் என்பவரை காதலித்து கடந்த 2019ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறிச் திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் அமுலுக்கு பெண் குழந்தை பிறந்தநிலையில் கடந்த 17ஆம் தேதி கௌதமின் உறவினர் ஒருவர் இறந்து விட்டதாக வந்த தகவலின்பேரில் அவரது வீட்டிற்கு கௌதம் சென்றுள்ளார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கணவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால், சந்தேகமடைந்த அமுல் அவரின் உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து கௌதமின் ஊருக்கு அமுலின் உறவினர்கள் சென்று பார்த்தபோது, அவர் இறந்துவிட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இதுகுறித்து அமுலுக்கு தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து தனது கணவர் ஆணவ கொலை செய்யப்பட்டதாகவும் அவரது மரணம் குறித்து தன்னிடம் மறைத்த அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆரணி காவல் நிலையத்தில் அமுல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







