லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
முதலில் லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவானது செப்டம்பர் மாதத்தில் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் துபாய் மற்றும் மலேசியாவில் லியோ படத்துக்கான நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் வரும் செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறும் என இறுதியில் தெரிவிக்கப்பட்டது. இசை வெளியீட்டு விழாக்களில் நடிகர் விஜய் பேசும் அரசியலும் அவர் சொல்லும் குட்டி கதைகளும் பேசுபொருளாக மாறுவது வழக்கம். அந்த வகையில் இந்த இசை வெளியீட்டு விழாவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மற்றொரு தகவலாக லியோ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமலஹாசன் பங்கேற்பார் என கூறப்படுகிறது. கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால் லியோ விழாவில் அவரை சிறப்பு விருந்தினராக அழைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.







