ஜெயிலரின் வெற்றி ரஜினியால் தான் சாத்தியமானது – நெகிழ்ச்சியில் நெல்சன்..!

ரஜினியால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. எல்லாவற்றையும் செய்துவிட்டு இமயமலை சென்றுவிட்டார் என நெல்சன் திலீப்குமார் நெகிழ்ந்து பேசினார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி…

ரஜினியால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. எல்லாவற்றையும் செய்துவிட்டு இமயமலை சென்றுவிட்டார் என நெல்சன் திலீப்குமார் நெகிழ்ந்து பேசினார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது. அதேபோல் இரண்டாவது வார இறுதி நாள்களை கடக்கும்போது ஜெயிலர் திரைப்படம் மொத்தம் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் ஒன்று கூடி ஊடகங்களை சந்தித்தனர். இதில் கலந்து கொண்டு இயக்குநர் நெல்சன் கூறியதாவது:

“படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆக வேண்டும் என்று நினைத்து இயக்கவில்லை. படம் நன்றாக வர வேண்டும் என நினைத்து எடுத்தோம். படத்தின் வெற்றிக்கு காரணம் ரஜினியின் திரை ஆளுமை. அவரது ரசிகர்களுக்கு நன்றி. இந்த வெற்றிக்கு ரஜினிதான் முக்கிய காரணம். இந்த திரைக்கதையின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கைதான் மிக முக்கிய காரணம்.

பட வெளியீட்டுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு படத்தை ரஜினிக்கு போட்டு காட்டினேன். அப்போது அவரிடம், “நான் கதை சொல்லும்போது ஒரு விஷுவல் உங்கள் மனதுக்குள் தோன்றியிருக்குமே, அப்படியான ஒரு படமாக இருக்கிறதா?’ என கேட்டேன். அதற்கு அவர், “நான் நினைத்ததை விட 10 மடங்கு சிறப்பாகவே வந்திருக்கிறது’ என கூறினார். இன்றைக்கு எனக்கு இருக்கும் நிறைவு அன்றே எனக்கு கிடைத்துவிட்டது.

நிறைய பேர் நம்மை சந்தேகத்துடன் பார்க்கும் போது, படம் சரியாக வருமா, இவர் சாத்தியப்படுத்துவாரா என பலரும் யோசித்துக் கொண்டிருந்தபோது, இதற்கு முக்கியப் புள்ளியாக இருக்கும் ஒருவர் நாம் சொல்வதை கேட்டு எங்களின் குழுவுடன் இணைந்து பணியாற்றினார்.

ரஜினியால்தான் இது சாத்தியமானது. எல்லாவற்றையும் செய்துவிட்டு இமயமலை சென்றுவிட்டார். அவரை நேரில் சந்தித்து இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். சந்தித்து நன்றி தெரிவித்து ஆசி பெறுவேன்” இவ்வாறு நெகிழ்ச்சியுடன் பேசினார் நெல்சன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.