கவிஞர் வைரமுத்து எழுதிய ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவல் பஞ்சாபியில் மொழிபெயர்க்கப்பட்டது.
வைகை அணை கட்டப்பட்ட போது காலி செய்யப்பட்ட 14 கிராமங்களை மையமாக கொண்டு ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவலை கவிஞர் வைரமுத்து எழுதினார். மண்சார்ந்த மக்கள், மண்ணோடும், வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு இந்த நாவலில் அவர் பதிவு செய்துள்ளார்.
வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத்தன்மை கொண்ட இந்த நாவல் 2003-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இந்நாவலை 23 மொழிகளில் சாகித்ய அகாடமி நிறுவனம் மொழிபெயர்த்து வருகிறது. இந்தி, உருது, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பஞ்சாபியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை மன்ஜித் சிங் மொழிபெயர்த்துள்ளார்.
https://twitter.com/Vairamuthu/status/1664097040975171584?t=GdGXFXwmGGcrKeEqXBVwrg&s=08
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பஞ்சாபி மொழியில் கள்ளிக்காட்டு இதிகாசம். உலகில் 12 கோடி மக்களால் பேசப்படும் பெருமொழி பஞ்சாபி. பரீதுதீன் முதல் அம்ரிதா ப்ரீத்தம் வரை, 11 நூற்றாண்டுகள் செழுமைப்படுத்தப்பட்டது. பஞ்சாபின் பஞ்ச நதிகளோடு வைகை சங்கமிப்பது பெருமை. மொழிபெயர்ப்பு மன்ஜித் சிங். நன்றி சாகித்ய அகாடமி” என்று பதிவிட்டுள்ளார்.







