கள்ளக்குறிச்சி கலவரம் : வாகனத்தை எரித்த 4 பேர் மீது குண்டர் சட்டம்

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம்…

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

 

பள்ளி பொருட்கள் சூறையாடப்பட்டதோடு, காவல்துறை வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டது. மேலும் காவலர்களும் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர். இதையடுத்து, இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி கேமிரா மற்றும் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி விளாந்தாங்கள் சாலை, புது பல்லகச்சேரி கிராமம், சின்ன சேலம் மற்றும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த நான்கு பேரை காவல் துறை அடையாளம் கண்டனர். அவர்கள் வாகனத்தை எரித்ததோடு, போலீசார் மீது கல்வீசி தாக்கியதாகவும், மாடுகளை திருடி சென்றதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில், இவர்கள் நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத், நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.