சென்னை கலாஷேத்ரா முன்னாள் மாணவியின் பாலியல் புகார் வழக்கில், பேராசிரியர் ஹரிபத்மன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறி கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாதம் முழுவதுமாக போராட்டத்தில் குதித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு அந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 3 ம் தேதி கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு பதிவு செய்த சென்னை அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவிகளிடம் நேரிடையாக விசாரணை நடத்தி விவரங்களை குற்ற பத்திரிக்கையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், பேராசிரியர் ஹரிபத்மன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததை தொடர்ந்து கடந்த ஜூன் 6ம் தேதி அவருக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஹரிபத்மன் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா








