பவர் பத்தீரம் பதிவு கட்டணம் ரூ.10 ஆயிரம் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்புக்கு 1 சதவீதம் என்ற அளவில் மாற்றுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பதிவுத்துறை சார்பாக பதிவு நடைமுறைகள் குறித்து சென்னை கலைவாணர் அரங்கில்
கருத்து கேட்பு கூட்டம் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி
தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அடுக்குமாடி கட்டிடம் கட்டும்
நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவன சங்கங்கள் கலந்து கொண்டு தங்கள்
கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி, பதிவு துறையில்
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் சென்ற ஆண்டு ரூ.17,298.67 கோடி வருவாய்
பதிவு ஈட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.5341.65 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது
என்றார்.
போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட 959 ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
என்றவர், பொதுமக்கள் வசதிக்காக பதிவுத் துறை ஸ்டார் 3.0 புதிதாக உருவாக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய இரண்டு புதிய மண்டலங்கள் மற்றும் 6 பதிவு
மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மூத்த குடிமக்கள் வரிசையில் காத்திராமல் பத்திர பதிவு செய்ய முன்னுரிமை
வழங்கப்பட்டுள்ளது எனவும் அப்போது தெரிவித்தார். இன்று நடைபெற்ற கூட்டத்தில்
பெரும்பாலனவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத அதிகார ஆவணங்களுக்கு ( பவர் பத்திரம்) பதிவுக்கட்டணம் ரூ.10 ஆயிரம் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் என்ற அளவில் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எனவே இது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
கிராமபுறங்களில் கிராம நத்தமாக இருக்கும் 3 அல்லது 5 செண்ட் பதிவில் எந்த
பிரச்னையும் இல்லை எனவும் அப்போது கூறினார். மேலும் இங்கு வைக்கப்பட்ட
கோரிக்கைகளில் நடைமுறைக்கு உகந்த கருத்துகள் நடைமுறை படுத்தப்படும், சில
கருத்துகள் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.







