நெல்லை மாவட்டம் களக்காட்டில் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் விளையும் வாழைத்தார்கள், கேரள சந்தைகளில் தனிச் சிறப்பு பெற்று வருவது வழக்கம். இதனால் அப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதை விட வாழைகள் பயிர் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். களக்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏத்தன், ரசகதலி, கதலி, செந்தொழுவன், நாடு உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் வழக்கமாக பிப்ரவரி மாதம் முதல் வாழைத்தார் அறுவடை தொடங்கும் நிலையில், இந்தாண்டு பருவம் தவறிய மழையினால் சாகுபடி காலதாமதமானது. இதன்காரணமாக மார்ச் மாதத்தில் வாழைத்தார் அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு!
ஏத்தன் ரக வாழைத்தார் 1 கிலோ ரூ.17க்கு விற்பனையாகிறது. பொதுவாக சீசன் தொடங்கும் போது 1 கிலோ ரூ.40 வரை விற்பனையாகும். ஆனால் நடப்பாண்டில் சீசன் தொடக்கத்திலேயே வாழைத்தாரின் விலை வீழ்ச்சியடைந்திருப்பது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாழைத்தாருக்கான செலவு ரூ.200 வரை ஆவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வாக களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைத்து, அரசே நேரடியாக வாழைத்தார்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அறுவடை காலத்தில் வாழைத்தார்களைச் சேமித்து வைக்க குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும் என்றும், பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி வேளாண் மற்றும் வணிகத்துறை சார்பில் களக்காடு ஜெ.ஜெ.நகரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் வாழைத்தார் சந்தை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் கட்டுமானப் பணிகள் மந்தமாகவே நடந்து வருவதாகவும், சந்தை செயல்பாட்டுக்கு வரும் முன்னரே அறுவடை சீசன் முடிந்துவிடும் என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே களக்காடு பகுதியில் அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– கா. ரூபி







