மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசின் அக்னிபாத் உள்ளிட்ட நல்ல திட்டங்ளையும் தமிழக அரசு எதிர்க்கிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியன் திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்துக்களின் உரிமைகளை மீட்பதற்காக இன்று திருச்செந்தூரில் இருந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து ஜூலை 31ஆம் தேதி சென்னையில் நிறைவு பெறுவதாக தெரிவித்தார்.
மேலும், அக்னிபாத் திட்டம் நல்ல திட்டம். அக்னிபாத் திட்டத்தை இந்து முன்னணி வரவேற்கிறது. அக்னிபாத் திட்டத்தை அரசியல் காரணங்களுக்காகவே எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு எதிர்க்கிறது. தமிழகத்தில் இருப்பது நாத்திக அரசு ஆதலால் பிரதமர் மோடியையும், மத்திய அரசின் திட்டங்களையும் எதிர்க்கிறது.
பழங்குடியின மக்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக வர வேண்டும். ஜனநாயக கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை இந்து முன்னணி வரவேற்கிறது. மதசார்பற்ற அரசு எனக் கூறும் தமிழக அரசு அனைத்து மதத்தினருக்கும் சமமாக நடந்துகொள்ள வேண்டும். ரம்ஜானை முன்னிட்டு மசூதிகளுக்கு அரிசி வழங்குவதுபோல ஆடி மாதம் மாரியம்மன் கோவிலுக்கும் அரிசி வழங்க வேண்டும்.
மசூதிகளையும், தேவாலயங்களையும் முஸ்லீம்களும், கிறித்தவர்களும் ஆள்வது போல இந்துக் கோவில்களை இந்துக்களே ஆளவேண்டும். இந்துக் கோவில்களை விட்டு தமிழக அரசு வெளியேற வேண்டும்.
மேலும், மசூதிகளையும், தேவாலயலங்களையும் இடிப்பதற்கு அச்சம் கொள்ளும்
தமிழக அரசு இந்து கோவில்களை மட்டுமே இடித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் கல்லூரி துவங்க வேண்டும் என்றால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை. ஆனால், ஒரு இந்து கல்லூரி துவங்க வேண்டும் என்றால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது என்றார்.
-ம.பவித்ரா







