கச்சத்தீவு குறித்து தவறான அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டு இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்க வேண்டாம் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின் போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது.
இதையும் படியுங்கள் : மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் – 5 வாகனங்கள் சேதம்!
இந்நிலையில், பிரதமர் மோடியின் x தளத்தில் பதிவிற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது x தளத்தில் பிரதமர் மோடியின் பதிவுக்கு இரண்டாவது நாளாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருந்ததாவது :
“வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் மற்றவர்களும் அறிக்கைகளை வெளியிட்டு இந்தியா, இலங்கை இடையிலான உறவுகளை மோசமாக்குவதற்கு முன்பு, அந்நாட்டில் 35 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சத்தீவு குறித்து உண்மைக்குப் புறம்பான மற்றும் போர்ப்பகை மூட்டும் அறிக்கைகளை வெளியிட்டிருப்பது, இலங்கை அரசையும் அங்குள்ள 35 லட்சம் தமிழர்களையும் மோதலுக்கு உள்ளாக்கும். மத்திய அரசு தனது போர்க் குணத்தை சீனாவிடம் காட்ட வேண்டும்.
மேலும், கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்பதை 2015 ஜனவரி 27-ஆம் தேதியிட்ட ஆர்டிஐ மூலமாக அனுப்பிய பதிலில் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அன்று பிரதமராக இருந்தவர் நரேந்திர மோடி. 27-1-2015 அன்று வெளியுறவுத் துறை செயலராக இருந்தவர் ஜெய்சங்கர். இலங்கைக்கு சிறிய தீவு எந்த சூழ்நிலைகளில் சொந்தமாகியது என்பதை இந்தியா நியாயப்படுத்தும் விதமாக அந்தப் பதில் இருந்துள்ளது. ஆனால், வெளியுறவு அமைச்சரும் அவரது அமைச்சகமும் திடீரென நிலைப்பாட்டை மாற்றியது ஏன்?”
இவ்வாறு ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
https://twitter.com/PChidambaram_IN/status/1775102493103477232








