மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் காட்டப்பட்டு இருக்கும் ஒரு சில காட்சிகள் பெரம்பலூர், குன்னம் வட்டம், கொளப்பாடி என்னும் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் தழுவல் எனக் கூறப்படுகிறது.
மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெறும் ஆணவக்கொலை காட்சியானது, சுமார் 42 வருடங்களுக்கு முன்னதாக கொளப்பாடி என்னும் கிராமத்தில் நடந்த ஆணவ
படுகொலையின் தழுவல் என அந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.
அந்த கிராமத்தில் சுமார் 42 வருடங்களுக்கு முன்பு சிவசாமி என்பவர், அதே
கிராமத்தில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்து வந்தார். அந்த ஊரைச் சார்ந்த பெரியசாமி மகன் ஆணைமுத்து, வடிவேல் மகன் மருதமுத்து, பொன்னன் மகன் சின்னத்தம்பி, கலியன் மகன் மருதமுத்து ஆகிய நான்கு பேரின் 15, 16 வயது மதிக்கத்தக்க மகன்கள், கிராமமக்கள் தேர்தல் நாளான அன்று வாக்கு செலுத்த சென்ற வேளையில் கணக்குப்பிள்ளை சிவசாமிக்கு சொந்தமான கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்துள்ளார்கள். தகவல் அறிந்த கிராம கணக்கு பிள்ளையான சிவசாமி என்பவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் என்பதால் ஈவு இரக்கமின்றி கிணற்றில் மின்சாரத்தை செலுத்தி சிறுவர்களை கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.
விவரம் அறியாத சிறுவர்களின் தந்தைகள் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் பிரேதத்தை எரித்து விட்டார்கள், உண்மை தெரியவந்ததும் அடுத்த நாளே சிவசாமி மீது உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். ஆனால், அவர்களை பொய்ப்புகார் கொடுத்து சிவசாமி சிறையில் அடைத்துவிட்டதாக கிராம மக்களும் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
தற்போது மாமன்னன் திரைப்படம் வெளியான நிலையில், அதில் இடம்பெற்ற கிணறு காட்சி தங்கள் கிராமத்தில் நடந்தது என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.




