சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றியை குவித்த திரைப்படம் சூரரைப் போற்று. கொரோனா காலக்கட்டத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் அழுத்தமான கதை, திரைக்கதை மூலம் ரசிகர்களின் மனதை வென்றது. அதுமட்டுமல்லாமல் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தயாரிப்பு, சிறந்த இசை, சிறந்த இயக்கம் உள்ளிட்ட பல பிரிவுகளில் தேசிய விருதினை இந்தப் படம் குவித்தது.
இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இப்படத்தினை 2டி எண்டர்டெயிமெண்ட் நிறுவனத்துடன் இணைந்து அருணா பாத்யா மற்றும் விக்ரம் மல்கோத்ரா தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு ஜோடியாக ராதிகா மதன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்துக்கும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு ’ஸ்டார்ட்டப்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியாக வேண்டிய இப்படத்தை 2024-ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகளை முடிக்க கால அவகாசம் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







