12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகளும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் – வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதின.
இதில் இந்தியா – இலங்கை இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது வெற்றி பெற்றது.
இந்திய அணியில் விஹான் மல்ஹோத்ரா 61 ரன்களும், ஆரோன் ஜார்ஜ் 58 ரன்களு குவித்தனர். இலங்கை தரப்பில் ரசித் நிம்சாரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
அதே போல பாகிஸ்தான் – வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதிய மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனையடுத்து வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.







