இந்தியாவில் உள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் முழு ஊரடங்கு என்பது அவசியம் தேவை என்று அமெரிக்க அதிபர் பைடனின் மருத்துவ ஆலோசகர் ஃபாசி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோரோனாவின் இரண்டாம் அலை வெகுவாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தினம் புது உச்சத்தைத் தொட்டுவருகிறது. இந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சமாக உள்ளது. இந்த புதிய உச்சம் உலக அளவில் ஒரு நாள் பாதிக்கப்படுவோரின் அதிகபட்சமான எண்ணிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் மீது திரும்பியுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொது முடக்கம் அவசியம் என்ற குரலும் உலக அளவில் எழுந்து வருகிறது. இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மருத்துவ ஆலோசகர் ஃபாசி “இந்தியாவில் பொது முடக்கம் என்பது அவசியமான ஒன்றாகும், மருந்து தட்டுப்பாடுகளைச் சரிசெய்வது, ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சரிசெய்வது, தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரிப்பது போன்ற அனைத்து முயற்சிகளும் ஒருபுறம் இருந்தாலும் முழு ஊரடங்கு என்பது அவசியமானது. இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முழு ஊரடங்கே கைகொடுக்கும். 6 மாத முழு ஊரடங்கு பிறப்பிப்பது என்பது சாத்தியமில்லை என்றாலும் சில வாரங்களுக்கான முழு பொது முடக்கம் என்பது அவசியம் தேவை, அதை செயல்படுத்தவும் முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர் “இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கமே சிறந்த வழி. இதன் மூலம் மட்டுமே மக்களிடம் கொரோனா பரவலைத் துண்டிக்க முடியும். சில வாரங்கள் பொது முடக்கத்தை அமல்படுத்துவது சரியாக இருக்கும். கடந்த சில தினங்களாக இந்திய மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறைகளால் அவதிப்படும் செய்திகளை எங்களால் பார்க்கமுடிகிறது. இவற்றைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. உலக அளவில் இந்தியா தடுப்பூசி தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இதனுடன் பொது முடக்கத்தை அமல் படுத்துவது நல்ல தீர்வாக அமையும்” என்றார்.







