அதிக வட்டி தருவதாக கூறி மோசடி ஈடுபட்ட தனியார் நகைக்கடை நிறுவனத்தின்
உரிமையாளர்களை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களுக்கு சொந்தமான ஷாப்பிங் மாலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நொளம்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தனியார் நகைக்கடை நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து அந்த தனியார் நிறுவனத்தின் நகைக்கடை, மால், டிரஸ்ட் என பல
இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொருளாதார குற்ற பிரிவு போலீசார்
சோதனை செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த தனியார் நகைக்கடை நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை நொளம்பூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான ஷாப்பிங் மாலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் அடங்கிய குழு ஆண் ஆல்வின், ராபின் ஆகிய இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.







