இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன் படி இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 மட்டுமே எடுத்தது.
122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இலங்கை அணி சார்பில் காவ்யா கவிந்தி, இனோகா ரணவீர ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை இந்திய மகளிர் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.







