முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த 600 பக்க இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று தாக்கல் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது 5ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வரைச் சந்தித்து அறிக்கையை வழங்கினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் மட்டுமல்லாது அதற்கு முன்பும் இருந்த நிலை குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் காலதாமதம் எதுவும் நான் செய்யவில்லை.
இரண்டு அரசுகளுமே முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியது. எவ்வித குறுக்கீடும் இல்லை. போயஸ் கார்டனில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில் எவ்வித சந்தேகமுமில்லை. அறிக்கையை வெளியிடுவது அரசின் முடிவு. எய்ம்ஸ் அறிக்கையை சிலர் வெளியிட்டுள்ளனர். அது பற்றி கவலையில்லை.
ஓபிஎஸ் வாக்குமூலம் அறிக்கைக்கு உதவியாக இருந்தது. எய்ம்ஸ் அறிக்கை வெளியான பிறகு தான் எனக்கு நிறைய புதிய யோசனைகள் தோன்றியது. அதை வைத்து அறிக்கையை மீண்டும் மாற்றியமைத்தேன் என்றார்.
-ம.பவித்ரா








