மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து அகற்றப்பட்டதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சித தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது; ”கடந்த 2013ம் ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் 700 அம்மா உணவகம் தொடங்கப்பட்ட நிலையில், நாள்தோறும் 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பசியாறி வந்தனர்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது . தற்போது அம்மா உணவக திட்டத்தினை ஆந்திர , கர்நாடகா , ஒரிசா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மதுரையில் தற்போது 12 அம்மா உணவகம் உள்ளது. இங்கு சில இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு புதிய பலகை வைக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் அதில் எந்த மாற்றம் இல்லை என்று அறிவித்திருக்கின்றார்கள். ஆனால், மதுரை மாநகராட்சியில் நடந்திருப்பது அவரின் உத்தரவை மதிக்காததுபோல் உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.








