ஜெயலலிதா மரண மர்மம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மத்தை விசாரிக்க 2017ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது அப்போதைய அதிமுக அரசு. அரசு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள் என 150க்கும் மேற்பட்டோரை ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்தது.
மூன்று மாத காலம் ஆணையத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அது தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வந்தது. இருந்தாலும் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதனிடையே அப்பல்லோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தை கலைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது?”எனக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பாக ஆறு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தது.







