‘ஜெய் பீம்’ திரைப்படம் உள்நோக்கம் கொண்டதல்ல! முற்போக்காளர்கள் வரவேற்கவேண்டிய ஒன்றே!! வன்முறையும், அச்சுறுத்தலும் தவிர்க்கப்படவேண்டும். தந்தை பெரியாரை மதிப்பது என்பதற்கு அடையாளம் அதுவே என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
“ஞானவேல் அவர்களின் இயக்கத்தில் திரைக் கலைஞர்கள் சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் வெளி வந்துள்ள ‘ஜெய் பீம்‘ என்ற திரைப்படம் சமூகநீதி, பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுவாக திரைப்படங்களின் இன்றைய நிலை என்ன?
திரைப்படம் என்றால் வெறும் பொழுதுபோக்கு – இளைஞர்களை ஈர்க்க சண்டைக் காட்சிகள், அரைகுறை ஆடைக் காட்சிகள் – இரட்டைப் பொருள் தரும் வசனங்கள் என்று ஆகிவிட்ட நிலையில், மனித குலத்தின் பெரு நோயான ஜாதியின் காரணமாக ஆண்டாண்டுக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலையை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டும் திரைப்படம்தான் ‘ஜெய் பீம்.’
காவல்துறையின் அணுகுமுறை
திருட்டு வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத நிலையில், காவல்துறைக்கு ‘ஊருக்கு இளைத்தவர்கள்’ குறவர், இருளர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த நிதர்சனமான உண்மையைப் படம் பிடித்துக் காட்டியதன்மூலம், அம்மக்களின் அவலநிலை பொதுப் புத்தியின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறையின் செயல்முறைகளிலும் ஒரு மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
நியாயமற்ற எதிர்ப்பு!
இந்த நிலையில், ஏதோ ஒரு ஜாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டது போன்ற வகையில் அப்படத்திற்கு எதிர்ப்புக் காட்டுவதும், திரைப்படம் ஓடும் திரையரங்கு களின்முன் போராட்டம் நடத்துவதும், நடிகர் சூர்யாவை அச்சுறுத்தும் வகையில் வன்முறையில் பேசுவது என்பது எல்லாம் ஆரோக்கியமானதுதானா?
நடிகர் சூர்யாவின் விளக்கத்திற்குப் பிறகும்…
குறிப்பிட்ட காட்சிபற்றி பிரச்சினை எழுப்பப்பட்ட நிலையில், அந்தக் காட்சி நீக்கப்பட்ட பிறகும், நடிகர் சூர்யா தரப்பில் படம்பற்றி விளக்கப்பட்ட பிறகும், எல்லை தாண்டிய அளவிலான விமர்சனம், வன்முறை, ஏவல் என்பதெல்லாம் சரியானதுதானா? என்பதை சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்கவேண்டும்.
தந்தை பெரியாரை போற்றுவோர் பார்வைக்கு…
தந்தை பெரியாரைப் போற்றுவதாகவும், பின்பற்றுவ தாகவும் கூறுவோர், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் ஊக்கம் கொடுக்காமல், பொது மக்களுக்கும், தங்கள் கட்சியை, அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தக்க விளக்கம் அளித்து ஆற்றுப்படுத் துமாறு வேண்டுகிறோம்.
அரசியல் பாதைக்கும் உகந்ததல்ல!
அரசியல் பாதைக்கும், பயணத்திற்கும் அதுவே உகந்ததாக இருக்க முடியும் என்பதை உணர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். குறிப்பிட்ட கட்சிக்கு ஜாதிதான் அடையாளம் என்ற நிலையும் நல்லதல்ல!” என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.