ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்த போது பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்ததாகத் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், படுகாயமடைந்த பல பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த இடத்திலிருந்து பயணிகளை மீட்பதில் பெரும் சவால்கள் நிலவுவதாகவும், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நேரிட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.