ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து கலி மைதான் என்ற பகுதி நோக்கி இன்று காலை பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் 36 பேர் பயணித்தனர். சாஜியன் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பிராரி நல்ஹா என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிபாராத விதமாக பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெரும் சத்தத்துடன் பேருந்து விபத்துக்குள்ளானதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ராணுவம், உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.