உலகத் தரத்திற்கு சிறப்பாக மாறவிருக்கும் ஜம்மு விமான நிலையம்!

ஜம்முவில் உள்ள தற்போதைய விமான நிலையத்தை ரூ.523 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி மத்திய அரசால் கோரப்பட்டிருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜம்மு…

ஜம்முவில் உள்ள தற்போதைய விமான நிலையத்தை ரூ.523 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி மத்திய அரசால் கோரப்பட்டிருக்கிறது.

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜம்மு விமான நிலையம், மிகுந்த பதற்றமான மற்றும் பாதுகாப்பு நிறைந்த விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. 2020-21ம் ஆண்டு இந்த விமான நிலையத்தை 12 லட்சம் பயணிகள் பயன்படுத்தினர். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 50% வளர்ச்சியை கண்டுள்ளது. மேலும் தற்போது, 24 விமானம் தரையிறங்கும் தளங்கள், 24 புறப்படும் தளங்களுடன் உள்ளது.

இந்நிலையில் ஜம்மு விமானநிலையம் விரிவாக்கம் செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளியை மத்திய அரசு கோரியுள்ளது. இந்த விமான நிலையத்தின் விரிவாக்கப்பணிக்கு பிறகு ஆண்டுக்கு 45 லட்சம் பயணிகளை கையாளும் வகையில், தற்போது இருக்கும் நிலப்பரப்பை விட நான்கு மடங்கு பெரியதாக, புதிய விமான நிலையம் அமையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 57 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

விமான நிலையத்திற்கு பயணிகள் வரவும் வெளியேறவும் தனித்தனி வழிகள், பல தொழில்நுட்ப வசதிகளுடன் அமைய உள்ளது. ஜம்மு விமான நிலையம் கத்ராவில் உள்ள வைஷ்ணோ தேவி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மைய புள்ளியாக உள்ளது.

காஷ்மீர், தோடா மற்றும் லடாக் செல்லும் அனைத்து வழிகளும் ஜம்மு நகரத்திலிருந்து தொடங்குகின்றன. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக ஜம்மு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.