விழுப்புரம் நகர பகுதியான ஜி ஆர் பி தெருவில் உள்ள குடிசை வீடுகளில் மின் கட்டணம் ரூ.500 வந்தவை ரூ.5,000 ஆக அதிகரித்துள்ளதாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியிட்ட தன் எதிரொலியாக, இன்று மின்வாரிய அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் நகர பகுதியான ஜி.ஆர்.பி.தெருவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கூரை மற்றும் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளில் இருந்த பழைய மின் மீட்டர்களை அகற்றிவிட்டு புதிய மின் மீட்டர்களை மின் ஊழியர்கள் பொருத்திவிட்டு சென்றனர்.
புதிய மின் மீட்டர்கள் பொருத்தப்படுவதற்கு முன்பு வரை இங்குள்ள மக்கள், 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில், புதிய மின் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு இம்மாதம் மின் கணக்கீட்டாளர் ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை கணக்கீடு செய்து அதற்குரிய கட்டண தொகையை மின் கட்டண அட்டையில் எழுதிவிட்டு சென்றுள்ளார்.
அதில் ஒவ்வொரு வீட்டிலும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து இந்த தொகையை எப்படி செலுத்துவது என்று திகைத்து நின்றுள்ளனர். இதுபற்றி அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்த போது அதற்கு மின்வாரிய ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது .
இந்த நிலையில், இந்நிகழ்வு தொடர்பாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, இன்று மின்வாரிய அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் மின் வாரிய ஊழியர் லட்சுமணன் என்பவர் அதிகப்படியான மின் கட்டணம் வந்தததாக தவறாக பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்கட்டண முறைகேட்டிலும் அவர் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








