‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – திரைவிமர்சனம்

வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ளது யாதும் ஊரே யாவரும் கேளிர். இப்படத்தில் விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ், விவேக், மோகன் ராஜா, சின்னி ஜெயந்த், மகிழ் திருமேனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பல…

வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ளது யாதும் ஊரே யாவரும் கேளிர். இப்படத்தில் விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ், விவேக், மோகன் ராஜா, சின்னி ஜெயந்த், மகிழ் திருமேனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பல போராட்டங்களுக்கு பின் வெளியாக உள்ள இப்படம் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதை

விஜய்சேதுபதியின் பெயர் புனிதன். இவர் ஒரு இலங்கை அகதி. இவருக்கு இசை மேல் மிகப் பெரிய பற்று உள்ளது. அதனால் சிறு வயதிலேயே லண்டனில் உள்ள இசைகுழுவில் சேர விரும்புகிறார். ஆனால் அதற்குள்ளாக இலங்கை போலீசார் புனிதனை கைது செய்கின்றனர். சில ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்த புனிதன் இந்தியாவிற்கு வருகிறார். கொடைக்கானலில் உள்ள ஒரு இசைக்குழுவில் மேகா ஆகாஷூடன் இணைகிறார் புனிதன்.

இன்னொரு பக்கம் லண்டனில் நடைபெறும் இசைக்கச்சேரிக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால், நேசனாலிட்டி, அடையாள அட்டை உள்ளிட்ட பல பிரச்னைகளால் நாட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. இன்னும் சொல்ல போனால் ஒரு செல்போன் வாங்க கூட முடியவில்லை. அதனால் அகதி முகாமிலிருந்து சிறு வயதில் காணமல் போனா கிருபாநிதியின் அடையாளத்தை பயன்படுத்தி அகதிகள் முகாமில் சேர விண்ணப்பிக்கிறார் புனிதன்.

இன்னொரு பக்கம் கிருபாநிதியை போலீஸ் தேடுகின்றனர். கிருபாநிதி, புனிதனின் நிலை என்ன? லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா புனிதன்?  என்பது தான் படத்தின் மீதி கதை.

மகிழ் திருமேனி போலீசாக நடித்துள்ளார். சின்னி ஜெயந்த், ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மோகன் ராஜா, கரு.பழனியப்பன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

படத்திற்கு பக்கபலமாக இசை உள்ளது. ஹீரோவை இசைகலைஞராக காண்பிக்கும் போது நடிப்பும் இசையும் வேறமாரி இருக்கனும். இது பக்கா வொர்க்அவுட் ஆகியிருக்கு. படத்தில் காண்பிக்கும் ஒரு சில விஷயங்கள் உதாரணத்திற்கு விஜய்சேதுபதி இசை மீது காட்டும் காதல். மோகன் ராஜா மற்றும் மேகா ஆகாஷின் தந்தை மகள் பாசம். நிலச்சரிவில் புதைந்துபோன  தேவாலயம் உள்ளிட்ட காட்சிகள் மனதை ஈர்க்கிறது.

மிஸ் யூ சின்னக்கலைவானர்

படத்தில் விவேக் பாதிரியாராக நடித்துள்ளார். வழக்கம் போல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார். பொதுவாக திரையில் சின்னக் கலைவானர் விவேக் தோன்றினாலே சிரிப்பு தானாக வந்துவிடும். ஆனால் இந்த படத்தில் பல நாட்களுக்கு பிறகு இவரை பார்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது.  இனி புதிய படங்களில் அவரை பார்க்க முடியாது என்றும் நினைக்கும் போது ஏற்க மறுக்கிறது மனம். மிஸ் யூ விவேக் சார்.

படத்தின் கரு

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர சகோதரிகளே.! அது போன்று உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே என்று 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக நம் உலகிற்கு எடுத்துக்காட்டி விட்டு சென்றுள்ளார் கணியன் பூங்குன்றனார். இத்தகைய அற்புதமான பொருளை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் தான் யாதும் ஊரே யாவரும் கேளிர்.

அகதிகளுக்கு நிகழும் பிரச்னைகள், முகாம் என்ற பெயரில் அவர்களை துன்புறுத்தும் செயல்கள். ஜாதி, மத, மொழி வேறுபாடுகள். மத்திய, மாநில அரசுகள் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் காட்சிகள். ஒவ்வொரு முறை போராட்டம் வரும் போதும் அகதிகள் தங்களுடைய குடும்பங்களை விட்டு பிரியும் துயரம். இப்படி மனிதம் என்ற வார்த்தையை முன்னிறுத்தி உள்ளது இப்படம்.

பல கதாபாத்திரங்கள் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு எல்லாம் தனித் தனி கதை. இப்படி எல்லாருடைய கதையையும் சுருக்கமாகவும், அற்புதமாக எடுத்துரைத்துள்ளது இப்படம். சில இடங்களில் கண்ணீர் வருகிறது. இந்த உலகம் எல்லாருக்கும் ஒன்றுதான் என்பதை ஆழமாக மனதில் பதிய வைக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கூற்றுக்கு பெருமை சேர்க்கிறது இப்படம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.