‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா: முன்பதிவு தொடங்கிய 15 நொடிகளில் காலியான டிக்கெட்டுகள்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகள் 15 வினாடிகளில் காலியானதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகள் 15 வினாடிகளில் காலியானதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ’டைகர் ஹுக்கும்’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. 

அண்மையில் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ம் தேதி  நடக்கவுள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்தது. இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலானது. அந்த வீடியோவில் நடிகர்கள் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில், ரம்யாகிருஷ்ணன், தமன்னா, அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்பதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டது.

இந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரில் காண 500 பேருக்கு தலா 2 அனுமதிச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுமென படக்குழு அறிவித்திருந்தது. அதற்கான முன்பதிவு இன்று மதியம் தொடங்கும் எனவும் படக்குழு அறிவித்தது.

https://twitter.com/sunpictures/status/1683379344515952643

அதன்படி, இன்று மதியம் 1 மணிக்கு http://jailer.sunpictures.in/ என்ற இணையதளத்தில்  முன்பதிவு தொடங்கியது. ஆனால் இந்த லிங்க் வெளியிடப்பட்ட 15 வினாடிகளில் அனைத்து டிக்கெட்களும் காலியானதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் பல ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.