கடலூரில் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீவைத்து எரிக்க முயற்சித்த சம்பவத்தில் ஜெயில் வார்டன் உட்பட 2 பேரை போலிஸார் கைது செய்தனர்.
கடலூர் மத்திய சிறைச் சாலையில் உதவி ஜெயிலராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களாக மத்திய சிறைச்சாலையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு செல்போன் மற்றும் சார்ஜர் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்தார். மேலும் கைதிகளை கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனிடையே சொந்த வேலை காரணமாக மணிகண்டன் தஞ்சாவூருக்கு சென்றிருந்த நிலையில் ஆகஸ்ட் 28ம் தேதி அதிகாலை வீட்டில் அவரது மனைவி,தாய் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, சமையலறையில் மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் எரித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். எனினும், அதிருஷ்டவசமாக அக்குடும்பத்தினர் உயிர் தப்பினர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் படி ஆய்வாளர் உதயகுமார், டெல்டா பிரிவு உள்ளிட்ட 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். சிறைச்சாலையில் உள்ள கைதிகள் யாரேனும் கூலிப்படை மூலம் இந்த செயலை செய்தார்கள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
.இந்த நிலையில் திருவாரூர் பகுதியில் கூலிப்படையினர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அடுத்து கட்ட விசாரணைக்காக அங்கு விரைந்தனர். தொடர்ந்து இன்று கடலூர் மத்திய சிறைச்சாலையில் பணிபுரியும் வார்டன் செந்தில்குமார் மற்றும் சென்னை சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். இந்த கொலை முயற்சி சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக இருவரையும் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.







